Sunday, Apr 22nd

Last update04:55:18 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் சமயநெறி தை அமாவாசையும் பிதிர் வழிபாடும் - 16.01.2018

தை அமாவாசையும் பிதிர் வழிபாடும் - 16.01.2018

E-mail Print PDF
Related image

தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  16.01.2018 செவாய்கிழமை அமைவதாகவும் சோதிடம் கணிக்கின்றது.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

சூரியனைப் "பிதிர் காரகன்" என்றும், சந்திரனை "மாதுர் காரகன்" என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர்.

தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினத்திலும் , அன்னையை இழந்தவர்கள் பூரணை தினத்திலும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

இந்துக்களின் நம்பிக்கை

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பதும், பிதிர் கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் என்பதும், பிதிர் கடன் செய்யாது விடின் பிதிர் தேவர்கள் சபித்து விடுவார்கள் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் சைவ மக்களில் பலர் போர்க்கால சூழலில் தம் பெற்றோரை இழந்ததும்; அவர்களுக்குரிய இறுதிக் கிரியைகளை செய்ய முடியாதவர்களாகவும், மேலும் சிலர் வெளிநாடுகளில் வசிப்பதனால் பெற்றோரின் இறுதிக் கடன்களை செய்ய முடியாது தவற விட்டவர்களாகவும் இருக்கலாம். அப்பா, அம்மா உறவுகள் என அனைவர்க்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள், சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாதவர்கள், ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை, சித்திரா பௌர்ணமி, ஆடி அமாவாசை போன்ற பிதிர் திதிகளில் விரதம் அனுஷ்டித்து தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.

இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம்.

யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் "வீட்டுக்குப் படைத்தல்" என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில் யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.

யாழ்ப்பாண மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும்;  மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும்; திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும்; மன்னார் வவுனியா மக்கள் திருக்கேதீஸ்வரம் பாலாவியில் தீர்த்தமாடியும்; கொழும்பு வாழ் மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தி வருகின்றனர்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரினது ஆன்மீகக் கடமையாகும்.

சுமங்கலிப் பெண்கள் (கணவன் வாழ்ந்து கொண்டு இருப்பதால்) தனது தந்தைக்காக்ஃவோ தாய்காகவோ பிதிர் தர்பணம் செய்வது வழக்கத்தில் இல்லை.

சுபம்


6352.26.01.2017

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS