Sunday, Apr 22nd

Last update04:55:18 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: வாழ்த்துக்கள் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் ஜேசுநாதர் அவதாரமும் வரலாற்றுக் குறிப்பும் வீடியோ இணைப்பு

ஜேசுநாதர் அவதாரமும் வரலாற்றுக் குறிப்பும் வீடியோ இணைப்பு

E-mail Print PDF
No automatic alt text available.

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய்

அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய்

பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த

பாலன் யேசு பிறந்த இவ் இனிய நன்நாளை

நத்தார் பண்டிகையாக கொண்டாடும்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்

எங்கள் மகிழ்ச்சி பொங்கிய  நத்தார் வாழ்த்துக்கள்

panippulam.com

ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டவர். மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தார் இயேசு.  

இயேசு கிறுஸ்து அவதாரம்:

இயேசு கிறிஸ்து  ஜெருசலேமின் தெற்கேயுள்ள "பெத்தலகேம்" என்னும் ஊரில் கன்னி மரியாளுக்கு மகனாக அவதரித்தார். மனிதனாகவும், தெய்வீகமானவராக, கடவுளின் மகனாக கன்னி மரியாளிடம் அவதரித்த இவர், பிரதான ஆசாரியனாக கடவுளின் வலது பாரிசத்திலிருந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்தவ "பைபிளின்" தந்தையாகவும் மனித வர்க்கத்தின் முக்கியமானவராகவும் இருக்கிறார்.

இற்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீன் தேசத்தில் பெத்தலகேம் ஊரில் ஒரு விண்மீன் (வால் நட்சத்திரம்) கிறிஸ்து நூதர் பிறந்தபோது தோன்றியது. கீழ்த்திசையில் இருந்து சென்ற மூன்று ஞானிகள் அந்த விண்மீனின் துணையோடு இரட்சகரைத் தேடிச் சென்றனர். இது இறைமகன் இயேசுவின் வரலாற்றில் கூறப்படும் ஒரு நிகழ்வாகும்.

வரலாற்றில் இடம்பெற்ற இந்த நூதன விண்மீன் எத்தகையது? அதன் இயக்கம் எப்படிப்பட்டது? அது தோன்றுதற்குரிய ஏதுக்கள் எவை? இயற்கை நிகழ்ச்சிகள்தான் காரணமா? அல்லது அற்புதமாகத் தோன்றியதா? என்பது பற்றி அன்று முதல் இன்றுவரை வாழ்ந்த, வாழுகின்ற விண்வெளி ஆய்வாளர்களும் புவியியல் வல்லுனர்களும் பெரிதும் முயன்றும் அந்தப் புதிருக்கு விடைகாண முடியவில்லை.

அந்த நூதன நட்சத்திரம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் வால் நட்சத்திரமா? அன்றேல் வானமண்டலத்தில் இறைவன் படைத்த விண்மீன்களில் ஒன்றா? என்பதுவே புதிராக உள்ளது. வானமண்டலத்தில் உள்ள கிரகங்கள் சில காலங்களில் ஒன்றோடொன்று எதிர்ப்படுவதுண்டு. அவ்வாறு நேருக்கு நேரே இரு கிரகங்கள் சந்திக்கும் போது பூமியில் உள்ளவர்களுக்கு வானத்தில் பிரகாசமான ஒளிப்பிழம்பு அல்லது பிரபை தோன்றுவதுண்டு. எல்லா விண்மீன்களையும்விட பெத்லகேமில் தோன்றிய நவமான நட்சத்திரம் பிரமிக்கத்தக்க பிரபையுடன் தோன்றியுள்ளது என்பது மட்டும் தெளிவாகவுள்ளது.

இயேசு கிறுஸ்து என்பதன் அர்த்தம்...
இரண்டு வகையான பெயர்கள் இயேசுக்கிறிஸ்துவில் இணைந்துள்ளன.  அவருடைய சொந்தப் பெயரான “இயேசு” அத்துடன் பட்டப்பெயரான “கிறிஸ்து” என்பவையாகும். கிறிஸ்து  என்பதன்பொருள் “அபிஷேகிக்கப்பட்டவர்” அல்லது “மேசியா” (மீட்பர்) என்பதாகும்

குழந்தைப்பருவத்தில் அவர் கலிலேயா ஊரின் பட்டணமாகிய   நாசரேத்து என்னும் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கே அவர் தனது தாயாராகிய மரியாளினாலும், அவளுடைய கணவனாகிய தச்சு வேலைசெய்யும் யோசேப்பினாலும் வளர்க்கப்பட்டார்.

இதனாலேயே அவர் “நாசரேத்து ஊரானாகிய இயேசு” என்று அழைக்கப்பட்டார், “அல்லது யோசேப்பின் குமாரனும்  நசரேத்து ஊரானுமாகிய இயேசு” என்றும் அழைக்கப்பட்டார்.  (யோவான் 1:45)

இயேசு தனது தாய்க்கு முதற் குழந்தையாவார். அவருக்கு நான்கு சகோதரர்களுண்டு ( யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன்) அத்துடன் பெயர் குறிப்பிடப்படாத சகோதரிகளுமுண்டு( மாற்கு 6:3).

யோசேப்பு, ஏசுவின்  ஊழியம் தொடங்குமுன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது, மரியாளும் அவளுடைய குடும்பத்தின் மிகுதியானவர்கள் யாவரும் ஏசுவின் மரணத்தின் பின்பு உயித்தெழுதல் நடைபெற்ற பிற்பாடு ஜெருசலேம் தேவாலயத்தின் அங்கத்தவர்களானார்கள்.

கிறிஸ்துமஸ் குறித்த பல சுவையான தகவல்கள் - அறிந்து கொள்வோம்:

வழிகாட்டிய நட்சத்திரம்
இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது. அப்படியோரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர். இயேசு பிறந்ததும் அதிசியக்தக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது "கிறிஸ்துமஸ் தாத்தா" எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா?.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4 ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6 ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.

6 ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம்
விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.

முதல்
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார். அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.

விசேஷ கிருஸ்துமஸ்
இயேசு பிரான் பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் பவுர்ணமி வருகிறதோ அந்த கிருஸ்துமசை விஷேச கிருஸ்துமஸ் ஆக கொண்டாடுகின்றனர்.

இயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிருஸ்துமஸ் தினத்தன்று பவுர்ணமி வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் 1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஆண்டுகளில் 5 தடவை விஷேச கிருஸ்துமஸ் வந்துள்ளது. இனி கிறிஸ்துமஸ் தினமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வரும் அபூர்வம் 2015-ம் ஆண்டில் தான் வரும்.

கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு. 17ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.

அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்து சென்ற நட்சத்திரம் போல தான் இவையும் என உணர்ந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னை கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாக தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.

அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மை காப்பாற்ற காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

பசிலிக்கா ஆலயம்
பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.
இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களூர் ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.

இயேசு சுமந்த சிலுவையின் மரத்துண்டு
இயேசுநாதர் தனது தோளில் சுமந்து சென்று, ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித சிலுவை மரத்தின் புனித துண்டு ஒன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு புனித சிலுவை மரத்தின் துண்டு வந்து சேர காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேதலனோவா அடிகளார்.

1581 ம் ஆண்டு இந்த ஆலயத்தின் பங்கு தந்தையாக இருந்த இவர் ரோம் நகரில் இருந்து இயேசு தலைமை குருவான கிளாடியஸ், ஆக்குவா, வீவா அடிகளுக்கு புனித சிலுவையின் சிறு பகுதி வேண்டி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை தலைமை குரு போப் ஆண்டவரிடம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

போப் ஆண்டவரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் சிறிய பகுதியை சிலுவை வடிவில் கொடுத்தார். அதை தலைமை குரு மணப்பாடு ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார். 1583 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த புனித சிலுவையின் துண்டு தூத்துக்குடி மணப்பாடு ஆலயத்திற்கு வந்தடைந்தது. அன்று கொண்டு வரப்பட்ட அந்த புனித சிலுவையை இன்று வரை பக்தியுடன் பாதுகாத்து வருகிறார்கள். மாதத்தின் முதல் வெள்ளியன்றும், திருவிழா நாட்களிலும் பக்தர்களின் வணக்கத்துக்காக இதை வைக்கிறார்கள்.

கிறிஸ்துவின் அவதாரம்:
உலகில் வாழும் மக்கள் தங்கள் சமயத்தையும், சமூக சிந்தனைகளையும் கடந்து கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை கிறிஸ்மஸ் ஆகும். இதற்கு காரணம் இறைவன் மனுக்குலத்தின் வரலாற்றில் குறுக்கிட்டார். இதனால் தான் வரலாற்று ஆசிரியர்கள் கி. மு., கி. பி. என உலக வரலாற்றையே இரண்டாக பிரிக்கின்றார்கள்.

இந்த வரலாறு ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இது ஒரு சரித்திரம். இச் சரித்திரம் மகா புனிதமானது.

மெசியா ஒருவர் வருவார் என யூதர்கள் எல்லாரும் நம்பியிருந்தார்கள் இந்நம்பிக்கை இறைவாக்கினர்கள் மூலம் பல சந்தர்ப்பங்களில் சொல்லப்பட்டது. இச்செய்தி இறுதியாக கன்னியாகிய மரியாளுக்கு சொல்லப்படுகின்றது. லூக்கா 1.31 இல் ‘இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு "இயேசு" என்னும் பெயரிடுவீர்’

இயேசு என்பதின் பொருள் இரட்சகர். கிரேக்க பாஷையில் யோசுவா என அழைக்கப்படுகின்றது. இயேசு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட பெயர் "ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என மத்தேயு 1 : 21 இல் காணலாம்.

கிறிஸ்துவின் பிறப்பு கி. மு. 4 ஆம் ஆண்டில் நடைபெற்றதாகத் தான் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். அந்தக் காலத்தில் அகுஸ்து அரசன் ரோம் சக்கரவர்த்தியாயும் பெரிய ஏரோது யூதேயா தேசாதிபதியாகவும் இருந்தார்கள். உலகமெங்கும் ஒரே அரசு. கிரேக்க பாஷை எங்கும் பேசப்பட்டது. யூதர்கள் எல்லா இடமும் சிதறி வாழ்ந்தார்கள். இந்தக் காலம் கிறிஸ்து உலகில் பிறப்பதற்கு தகுதியான ஒரு காலமாக இருந்தது.

மரியாளுக்கு இப் பிறப்பின் செய்தி சொல்லப்பட்ட பின்னர் மரியாள் ஒரு புரட்சிப் பாடல் பாடுகின்றார். இதனுடைய பின்னணியை சற்று பார்த்தால் லூக்கா நற்செய்தி நூல் ஆசிரியர் மரியாளுக்கு குழந்தை இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த கபிரியேல் தூதன் வயது முதிர்ந்த நிலையிலும் கருவுற இயலாத எலிசபேத் 6 ஆம் மாதமாக கர்ப்பவதியாக இருக்கின்றார் என்ற செய்தி சொல்லப்படுகின்றது. ‘லூக்கா 1 : 36 இல் காணலாம்.

இச்செய்தியைக் கேட்ட மரியாள் நாசரேத்தூரிலிருந்து எலிசபேத் வாழ்ந்த ஊருக்கு போகிறார். மரியாள் ஏறக்குறைய 155 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மரியாள் எலிசபெத்தை சந்தித்தபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை (முழுக்கு முனிவர்) மகிழ்ச்சியால் துள்ளியது என லூக்கா 1 : 41 இல் காண்கின்றோம். இந்நூல் ஆசிரியர் சொல்கின்ற மீட்பரைக் கண்ட மகிழ்ச்சி, மெசியாவின் தாயைக் கண்ட மகிழ்ச்சியில் எலிசபெத்தின் குழந்தை துள்ளும் நேரத்தில் தான் அப்புரட்சிப் பாடல் ஒலிக்கின்றது. ஒரு அருமையான பாடல் ஒரு யூதப் பெண்ணாக இருந்தும் துணிந்து பாடுகின்றார்.

லூக்கா 1 : 46 – 56 வரையுள்ள பகுதியில் இறைவன் தனக்கு செய்துள்ள நன்மைகளுக்காக நன்றி கூறி தம் முன்னோருக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளுக்காக நன்றி கூறிப் பாடலை முடிக்கின்றார். இதில் இறைவன் யார் என்று மரியாள் லூக்கா 1 : 49 – 50 இல் கூறுகின்றார். இறைவன் வல்லமையுள்ளவர். அவர் தூயவர். இரக்கமுள்ளவர். இவையெல்லாம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் இம்மக்கள் அனுபவித்த உண்மையாகும்.

இந்த நேரத்தில் நாம் இன்னுமொரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரண கிராமத்துப் பெண்ணாகிய மரியம்மாள் இறைவன் யார் என்பதை கூறியதைப் போல் திருவிவிலியத்தில் எகிப்தியப் பெண்ணாகிய ஆகார் (புறஜாதி பெண்) தான் இறைவனுக்கு முதல் பெயர் வைத்த பெண்ணாகும். தொடக்க நூல் 16 : 13 இல் காணலாம். பெண்கள் வரலாறு படைத்தவர்கள். வரலாற்றில் செயற்படும் இறைவன் என்ன செய்வார் எனப்பாடுகின்றார்.

இறைவன் நேற்றும் இன்றும் நாளையும் நடத்தி வரும் நடாத்தவிருக்கும் சமூக மாற்றத்தை காட்ட விரும்புகின்றார். இறைவன் வரலாற்றில் மனுவுரு எடுத்து வந்ததன் நோக்கத்தை காண்கின்றோம். மரியாள் தான் பெற்றெடுக்கும் மகவு இந்த உலகில் என்ன செய்யப் போகிறார் என தெளிவுபடுத்துகின்றார். லூக்கா 1 : 53 இல் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார். அதாவது ஒரு ஒழுக்கப் புரட்சியை ஏற்படுத்துகின்றார்.

செருக்கு பிறரை இகழ்ந்து நோக்கும் இயல்பு கொண்டது. ரோமர் 1 : 29 – 31இல் காணலாம். நெறிகேடுகள், பொல்லாங்கு, பேராசை, தீமை, பொறாமை, கொலை, சண்டை, சச்சரவு, வஞ்சகம், தீவினை, புறங்கூறுபவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், பெற்றோருக்கு கீழ்படியாதவர்கள், சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் இப்படிப்பட்டவர்கள் சாவுக்குரியவர்கள் இப்படி வாழ்பவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என 2 தீமோத்தேயு 3 : 2 இலும் யாகோபு 4 : 6 1 பேதுரு 5 : 5 இலும் காணலாம். இந்த ஒழுக்கம் கெட்ட நடத்தை வாழும் மனுக்குலத்தை சீர்படுத்தி புதிய சமூகத்தை உருவாக்க இறைவன் மனுவுரு ஏற்றார்.

ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது என வள்ளுவப் பெருந்தகை 131ம் குறளில் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

ஒழுக்கம் ஒருவரின் மிகப்பெரிய சிறப்பு. அது உயிரைக் காட்டிலும் விலை மதிப்புள்ளது. மனுவுரு எடுத்து வந்த இறைவன் சமூகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகின்றார். லூக்கா 1 : 52 இல் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். அதாவது தங்கள் பலத்தில் நம்பிக்கையுள்ளவர்களை தூக்கி எறிகிறார்.

எதிர் மறையாக தாழ் நிலையில் இருப்பவர்களை தூக்கிவிடுகிறார். இவ்வாறு தூக்கி நிறுத்தப்படுபவர்கள் யார் என்றால். ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்கள். திருப்பாடல்கள் 146 : 7 – 8 இல் ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்.

பசித்தோருக்கு உணவளிக்கின்றார். சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார். நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

இது தான் சமூகத்தில் செய்த உண்மை. இறைவனின் பார்வையில் எல்லாரும் சமம். இதனால் தான் பிறப்பின் செய்தியை அறிவித்த தேவதூதன் ‘எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன் லூக்கா 2 : 10 இல் காண்கின்றோம்.

கிறிஸ்துவின் பிறப்பு சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இன்று சமூகம் இழிநிலைக்குச் சென்றுவிட்டது. சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ளன. சமூகம் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றது. சமூக மாற்றம் தான் கிறிஸ்துவின் பிறப்புக்கு வழிவிடும்.

தான் கருவுற்று பிறக்க இருக்கும் மகவு பொருளாதாரத்திலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துவார் என மரியம்மாள் பாடுகின்றார். எப்படியென்றால் பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்லரை வெறுங்கையராய் அனுப்பி விடுகின்றார்.

இதனுடைய நோக்கம் ஏழ்மை உலகில் இருக்கக் கூடாது. சமதர்மப் பொருளாதாரம் இயேசுவின் பிறப்பிலேயே சொல்லப்பட்டாயிற்று. இதனை இயேசு தன் திருப்பணியிலும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வில் அறியலாம். வைத்திருப்பவர்கள் பகிர வேண்டும். ஒருவர் நன்றாக உண்டு குடித்து இருக்க இன்னொருவர் பசியால் சாகக் கூடாது. பகிர்வு என்பது இறைவன் மக்கள் மனங்களை மாற்றுவதன் மூலம் நடைபெறுவது. அப்போதுதான் இறையரசு முழுமையடையும்.
ஆகவே இன்று அகில உலகும் குதுகலத்தில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன.

ஆனால் கிறிஸ்து பிறப்பின் உண்மைத் தன்மையை உணராமல் இந்நாளை கேளிக்கை நாளாக்கி விட்டார்கள். அது மட்டுமல்ல திருச்சபைகள் இறைவன் ஏன் மனுவுரு எடுத்தார் என்பதை மறந்து மனுவுரு ஏற்பைச் சொல்லி சமூகத்தில் ஒழுக்கங்களை விதைக்காமல் வன்முறைகளையே விதைக்கின்றார்கள்.

நல்ல சமூகத்தை உருவாக்காமல் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் சாதிக்கொரு கோயில் சமூகத்திற்கு ஒரு கோயில் என கட்டி சமூகத்தை கூறுபோடுகிறார்கள். அதைவிட கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொருளாதாரச் சுரண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்நிலையை மாற்ற திரும்பவும் இயேசு பிறக்க வேண்டுமென்று உலகு எதிர்பார்க்கின்றது. இயேசு திரும்பவும் பிறக்க மாட்டார். ஆனால் வருவார். எப்படி வருவார் என்றால் நியாயதிபதியாக வருவார். அப்போது அவரை சந்திப்பதற்கு இக்கிறிஸ்மஸ் காலங்களில் எம்மை ஆயத்தம் செய்வோம்.

ஆயத்தம் என்பது ஆடையலங்காரங்களில் அல்ல. மனங்களை மாற்றுவோம். புதுவாழ்வை கண்டடைவோம். கிறிஸ்து எம்மில் பிறப்பார், புதுவாழ்வைத் தருவார்.

"கர்த்தர் எங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக"

ஜேசு நாதரின் பிறப்பும் அதன்போது நிகழ்வுற்ற அதிசயங்களும் பார்வையிட7679-18.12.2017

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS