Friday, Dec 15th

Last update07:59:25 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சமூக நோக்கு கட்டுரைகள் சூரிய, சந்திர கிரகணம் என்றால் என்ன? - அறிவியல் விளக்கம்

சூரிய, சந்திர கிரகணம் என்றால் என்ன? - அறிவியல் விளக்கம்

E-mail Print PDF

15.06.2011 திகதி நிகழ்ந்த பூரண சந்திர கிரகணத்தின் போது இந்தியாவில் தோன்றிய சந்திரனின் தோற்றங்கள் (படங்களில் நேரங்கள் குறிக்கப் பெற்றுள்ளன)

ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின்போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்.

யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின் கோயில்களை கழுவி விடுகின்றனர்.

மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விடயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைப்பிடிக்க வேண்டுமா?

கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின்பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடும். அப்போது அந்த வான்பொருள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும்.

இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.

2011 ஜூன் முதல் திகதியிலிருந்து ஜுலை முதல் திகதிக்குள் (30நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது...! ஆமாம் ஜூன் முதல் திகதி அன்று பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது ஜூன் 15ம் நாள் 2011 ஆம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவானது.

இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து...! அடுத்து ஜுலை முதலாம் திகதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்...!

சூரிய குடும்பம், ஒரு மணல் துகல் போல் பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.

பூமி தன் துணைக்கேளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை (Milky Way galaxy)  தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்தும் படை சூழ நொடிக்கு சுமார் 250 - 270 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து கோள்களும் சற்றே சாய்ந்த நிலையில்
பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.

ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 பாகை சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோடில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/ முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல் எல்லா அமாவாசை தினத்திலும் சூரிய கிரகணமும் உருவாவதில்லை.

சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரன் மிகச் சிறியது. அதன் விட்டம் 384,400 கி. மீ. மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். சூரியன் அளவில் பெரியதானாலும் தூரத்தில் இருப்பதனாலும்; சந்திரன் அளவில் சிறிதானாலும் கிட்டிய தூரத்தில்  இருருப்பதனாலுமே பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது சூரியனிம், சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே அளவினதாக தென்படுகின்றன. மிகப் பெரிய சூரியனை மறைத்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.

பொதுவாக ஒரு வருடத்தில் 2 - 5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம். ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும் 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிடங்கள் மட்டுமே.

எப்போதும் வட தென் துருவங்களில் பகுதி சூரிய கிரகணமே தெரியும் நில நடுக்கோட்டு (மத்திய தரைக்கோட்டிற்கு) அருகே கிரகணம் நிகழும் போதுதான் முழு சூரிய/ சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள் (நேரம், வகை போன்றவை) 18 வருடம், 11 நாட்கள் (6,585.32 நாட்கள்) நிகழும் இதற்கு சாரோஸ் சுழற்சி என்று பெயர்.

பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் தொடங்கி பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும் இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ/ மணி நில நடுக்கோட்டுக்கு அருகில் ஆனால் துருவங்களில் கிரகண வேகம் பொதுவாக 8,046 கி. மீ/ மணி. முழு சூரிய கிரகணம் 1.5 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி. மீ. பகுதி சூரிய கிரகணம் பூமியின் மற்ற இடங்களுக்கு முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி. மீ. தூரம் வரை தெரியும்.

முழு சந்திர கிரகணம்
ஜூன் 15 ஆம் நாள் நமக்கு காட்சி அளித்தது முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality)அதிக பட்சம் 107 நிமிடங்கள் ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி.

ஏனெனில், சந்திரன் பூமியை நீள் வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால் அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும். எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.

இந்த ஆண்டின் (2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ஆம் நாள் நிகழ்ந்தது. இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில் தெற்கு ஒபியுக்கசுக்கு (Southern Ophiuchus) அருகில் மேற்கு லாகூன் நெபுல (Lagoon Nebula, M8)  க்கு 7 பாகையில் நிகழ்ந்தது. இங்கே சந்திரனில் கருமைப் பகுதி முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீடித்தது. இதற்கு முன் ஜுலை 2000 ஆண்டில்தான் இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின் போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ. வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும்.

கிரகணத்தின்போது அதன் நிழல் விழும் பகுதியின் கறுப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra)பெனும்பரா (Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/ மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசையில் அற்புதமாய் தெரியும் இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் நிகழ்ந்த கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இவ்வேளையில் சூரிய மறைவையும். சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது செலனோஹிலியன் (ஷிலீlலீnலீhலீlion) என்ற நிகழ்வு உண்டாகிறது.

அரிதான மிக இருண்ட சந்திர கிரகணம்..!
இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் ஏற்பட்ட முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வு! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணித்தது. இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம் கி. பி. 2000 ஆண்டு, ஜுலை 16ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம் கி. பி. 2018, ஜுலை 27 ஆம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆபிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென் அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம் தொடங்குகிறது.

இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும். இது 34 வது கிரகணம். இந்த வகை சாரோஸ் சுழற்சி 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம் 2011 டிசம்பர் 10 ஆம் நாள் ஏற்பட இருக்கிறது.

முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கறுப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கறுப்பாக/ இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கறுப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும்.

பூமியின் வளிமண்டலம்தான் அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் முழு சந்திர கிரகணத்தின்போது அதனை சிவப்பான செம்பு நிலாவாகக் (Copper moon) காட்டுகிறது. இதுவேதான். சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்.

பால்வழி மண்டலம்
சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும். நமது சூரிய குடும்ப தாய்வீடான பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும்.
சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது.

ஏனெனில் முழு சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், முழு சந்திர கிரகணம் உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம், சீனாவில் சோயூ வம்சத்தின்  (Zhou Dynasty) சோயு-சூ புத்தகத்தில், கி. மு. 1136 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் நிகழ்ந்தாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள் நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர். முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று மக்களும் நம்பினர். இது கி. மு. 425, அக்டோபர் 9 ஆம் நாள் நிகழ்ந்தது. அதற்கு முன்னால், கி. மு. 413, ஆகஸ்ட் 28 ஆம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது.

இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ் (Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர். ஆனால் சைராகுசன்ஸ் (Syracusans) இதனை சாதகமாக எடுத்துக்கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர். ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார். சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால், ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

நன்றி

BLOG COMMENTS POWERED BY DISQUS