Wednesday, Nov 26th

Last update06:56:54 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சைவமும் தமிழும் சமயநெறி சித்திரைப் புத்தாண்டு - புது வருடப் பிறப்பு - 2011

சித்திரைப் புத்தாண்டு - புது வருடப் பிறப்பு - 2011

E-mail Print PDF

ஓம்

"கர" புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க அருள் தருக

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.  பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் 14.04.2011 வியாழக்கிழமை “கர” என்னும் பெயருடன் தமிழ் புதுவருடம் பிறக்கின்றது.

 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பிறக்கிறது. இது அறுபது வருடச் சுற்று வட்டத்தில் 25 வதாக அமைந்த (60 வருடங்களுக்கு ஒருமுறை வரும்) வருஷமாகும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மேட சங்கிரமான புண்ணிய காலமாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்
வாக்கிய பஞ்சாங்கப்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.39 க்கு பிறக்கிறது. அன்று காலை 7:33 மணி முதல் பகல் 3:33 மணி வரையும் விஷ புண்ணிய காலம் என குறிப்பிடப்படுகிறது.

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மராபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும்.

புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில் மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்து அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மருத்துநீர் என்பது;
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

இந்த இரு பஞ்சாக கால நிர்ணய புண்ணிய காலங்களில் ஏதாவது ஒன்றில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்.

இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம். அதன் காரணமாக இப் புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். மருதடி விநாயகர் ஆலயம் தற்போழுது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று வருவதனால் அலங்காரத் திருவிழா நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இத் தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது.  

இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

வருடப்பிறப்புக் கருமங்கள்:
புத்தாடை தரிசனம்
ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.

பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு
வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.

உணவு கரவருடத்தில் அறுசுவை உணவுடன் பால், தயிர், தேன், வேப்பம் பூ வடகம் போன்றவைகளை கண்டிப்பாக சேர்த்து, சுற்றம் சூழ இருந்து அளவளாவி புதுவருட உணவை உண்ணுதல் மேலானது.

கைவிசேடம்
14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.03 தொடங்கி 1.14 மணி அல்லது மாலை 06.03 தொடங்கி 07.38 வரையுள்ள சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.

விருந்துண்ணல்
புதிய கர வருடத்தில் வெளியிடங்களுக்குச் சென்று 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.18 தொடங்கி 10.27 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 11.18 தொடங்கி 12.47 வரையுள்ள சுபநேரத்தில் விருந்துண்டு மகிழ்தல் சிறப்பினை அளிக்கும்.

பெரியோர்களை சந்தித்தல்
புதிய கர வருடத்தில் பெரியோர்களை 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.28 தொடக்கம் 10.48 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 12.08 தொடங்கி 1.27 வரையுள்ள சுபநேரத்தில் சந்தித்து கலந்துரையாடுதல் நன்மை தரும்.

பூமி தரிசனம்
புதிய கர வருடத்தில் பூமி தரிசனம் செய்வதற்கு 14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.04 தொடக்கம் 1.44 வரையுள்ள சுபநேரம் அல்லது 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 8.15 தொடக்கம் 9.26 வரையுள்ள சுபநேரம் உகந்தது.

புதிய கல்வி
கர வருடத்தில் புதிய கல்வி முயற்சிகளை மேற்கொள்வதற்கு 20-04-2011 புதன்கிழமை காலை 7.33 தொடக்கம் 9-12 வரையுள்ள சுபநேரம் அல்லது 22-04-2011 வெள்ளிக்கிழமை காலை 9.12 தொடக்கம் 10.27 வரையுள்ள சுபநேரம் சிறப்புத்தரக் கூடியதாக அமையும்.

புத்தாண்டுக்கான சோதிட பலன்:
புத்தாண்டு கிரகங்கள்
“கர” ஆண்டுக்குரிய ராஜா சந்திரன். மந்திரி குரு. சேனாதிபதி புதன். மக்களுக்கும், கிரகங்களுக்கும் அதிபதி சூரியன். உணவு பொருள்களுக்கு அதிபதி சுக்கிரன். இந்த கிரகங்களை வணங்குவதன் மூலம் நமக்கு நற்பலன் கிடைக்கும். இந்த ஆண்டில் பெருமாளை வழிபடுவதன் மூலம், வர இருக்கும் சிரமங்கள் தூளாய் பறக்கும்.

“கர” ஆண்டில் கிரகண நாட்கள்
“கர” ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், மூன்று சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இரண்டு சந்திர கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும் என்பதால் அந்நாட்களில் மட்டும் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
* ஜூன் 15 புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நள்ளிரவு 1.38 மணிக்கு உச்சமாகி 3.32 மணிக்கு விடுகிறது. 3 மணி 40 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. இது முழுசந்திரகிரகணமாக இருக்கும். சந்திரனின் பிம்பம் மங்கலாகிவிடும்.

புதன்கிழமை பிறந்தவர்களும் ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம், ரேவதி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்டபின் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இந்த நாளில் சூன்ய திதி என்பதால் தர்ப்பணம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் சந்திரனை பார்க்க கூடாது.

* டிசம்பர் 10 சனிக்கிழமை மாலை 6.14 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இரவு 7.58 மணிக்கு உச்சமாகி 9.47 மணிக்கு விடுகிறது. 3 மணி 37 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. சனிக்கிழமை பிறந்தவர்களும் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்ட பின்பு சனிக்கிழமை இரவே தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அன்று பவுர்ணமி திதி என்பதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிரார்த்தம் செய்ய வேண்டும்.

“கர” ஆண்டில் சிறந்த கிழமை
கரதமிழ் புத்தாண்டில் நீங்கள் முக்கிய வேலை துவங்க இருந்தால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுங்கள். கிரக நிலைகளின் படி இந்த ஆண்டு வியாழக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நாளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள குருபகவானையும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிப்பட்டு பணிகளை துவக்கினால் அது வெற்றிவாகை சூடும்.

நல்ல மாதங்களும், கவன மாதங்களும்
கரபுத்தாண்டில் நட்சத்திர வாரியாக சிறந்த மாதங்கள் மற்றும் சோதனையான மாதங்கள் பற்றிய விபரம் கீழே தரப்படுகிறது அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், சுவாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 14 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஆண்டு முழுவதும் சோதனை குறைவாகவே இருக்கும்.

பரணி, பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் கார்த்திகை வரை சோதனை ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரை சோதனையான காலகட்டம்.

கார்த்திகை, கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மார்கழி முதல் பங்குனி வரை சோதனை ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் கார்த்திகை முடிய எட்டு மாதங்கள் சோதனையான காலமாகும். பூசம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் பங்குனி வரையிலான எட்டு மாதங்கள் சோதனை ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரையும், மார்கழி முதல் பங்குனி வரையும் சோதனையான மாதங்கள். இந்த சமயங்களில் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு, பணப்பிரச்னை ஏற்படலாம். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்பவும், தெய்வ வழிப்பாட்டிற்கு ஏற்பவும் சோதனைகள் குறையும்.

ஒரே மாதத்தில் மூன்று கிரக பெயர்ச்சிகள்
புத்தாண்டில் குரு, ராகு, கேது கிரகங்கள் மே மாதத்தில் பெயர்ச்சியாகின்றனர். அதுவும் ஒரு வார இடைவெளிக்குள் இந்த பெயர்ச்சிகள் நடக்கிறது. எனவே ஒரு கிரகம் தரும் நற்பலனை மற்றொரு கிரகம் பறிக்கலாம் அல்லது ஒரு கிரகம் தரும் கெடுபலனை மற்ற கிரகங்கள் மாற்றியமைக்கலாம்.

* குருபகவான் மே 9, திங்கள், அதிகாலை 1.09 மணிக்கு மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
* ராகு, கேது கிரகங்கள் மே 16, திங்கள் காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும், மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும் பெயர்ச்சியாகின்றன.
* சனிபகவான் டிசம்பர் 21, புதன் காலை 7.24 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சித்திரையில் எத்தனை பண்டிகைகள்!

சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே, அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

 

எம் இனிய அன்பு உள்ளங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்வோடும், ஆரோகியமாகவும் வாழ வாழ்த்துகின்றோம்

பணிப்புலம்.கொம்

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்

BLOG COMMENTS POWERED BY DISQUS